உன்னருகே நான் இருந்த ஓர் இரவு
உறக்கம் கலைந்தே உனைக் கண்டேன்
உறங்கும் குழந்தை உன் முகம்
உறக்கம் கலைக்கும் உன் தேகம்
இறுக எனைப்பற்றி மயிர்க்காட்டு மார்பில்
மலர் முகம் தான் புதைந்தாய்
சிணுங்கி அழும் சத்தம் கேட்டு
சிதறினேன் கண்ணகி காற்சிலம்பாய்...
கலக்கமுடன் காதல் முகம் கண்டேன்
குறுஞ்சிரிப்பு குழந்தை முகம்
சிதறிய நான் சிந்தித்தேன், சிந்தித்தேன்
சிணுங்கியது யாரென்று, யாரென்று
சின்னவள் சிரசில் முகம் புதைத்தேன்
உவமையில்லா உன் வாசம் கொண்டிடவே...
அதே அழுகுரல் அதிர்ந்துவிட்டேன்
மெல்லிய விளக்கிட்டு கேசம் விலக்கிட்டேன்
உதிர்ந்த தலைமுடி ஒவ்வொன்றும்
உலகம் முடிந்ததென ஒப்பாரி தான் வைக்க
அமைதியாய் அதட்டி சொன்னேன் அழுகை நிறுத்த
அழுது அவள் உறக்கம் கலைக்காதீர் என்றே
கணம் நிறுத்தி கவிழ்ந்த தலை நிமிர்த்தி
வெடித்து அழுதன ஆனாலும் அமைதியாய்
கலங்கியே போய்விட்டேன் கண்டதிலே
என்னவென்று கேட்கும் முன்னே
சொன்னவை எல்லாம் காரணமா? காதலா?
வருடம் பல வருந்தி வாழ்ந்திருந்து
வரம் வேண்டி, மாய உடல் விட்டு
மங்கை இவள் மயிர் ஆனோம்
உலகின் உயரிய இடம் பெற்றோம்
உன்னத நறுமணம் தான் பெற்றோம்
மகிழ்ந்திருந்தோம், மலர் தேகம் தன்னில்
எவரின் சாபமோ? அடைந்தோம் முக்தி
அரியவள் சிரசமர இழந்தோம் சக்தி
காலையில் கலைந்தெரிவாள் காற்றில்
உணர்வதில்லை அவள் எங்கள் உயிர்
அவளுக்கோ உதிர்ந்தது வெறும் தலை மயிர்
அழுது பயனில்லை, ஆண்டவன் தாழ் பணிவோம்
அருமையிவள் தலையிருந்து தவம் தான் இருக்க
கேட்டு முடித்த கணம் மாறிப்போகவிருந்தேன்
மங்கையிவள் மயிராய் நானும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக