கருவும் உயிரும் கலந்து
உருவம் உணர்வு தந்த உறவு நீ
பிண்டத்தை பிள்ளையாக்கி
உதிரம் உணவாக்கிய உன்னதம் நீ
முப்பருவம் வயிற்றில்
மூப்பிலும் மனதில் சுமந்து
சுகிக்கும் சுமைதாங்கி நீ
மலம் ஜாலம் கழித்தாலும்
மகிழ்ந்து நீ இருந்தாய்
உன் அருமை உணராமல்
உன் பெருமை போற்றாமல்
உன் அடி தொழாமல்
வீண்வாதம் பேசிட்டேன், ஏசிட்டேன்
மரியாதை வார்த்தையில் இல்லை
மகனென்ற தாழ்மை இல்லை
மனதில் ஏதோ கொஞ்சம் பாசமுண்டு
நான் இன்றி நான் துடிப்பேன்
நீயின்றி வரவில்லை
நீயின்றி நான் பிரியேன்
பணிவிடை செய்ததில்லை
பணிவுடன் இருந்ததில்லை
தொழுது இருந்ததில்லை
தொண்டும் நான் செய்ததில்லை
தொலைவில் இருந்தாலும்
துடிப்பு மட்டும் இருக்கிறது
மடியில் இருந்தவரை
மனதில் ஒரு களங்கமில்லை
கவனம் சிதறவில்லை
கவலை சேரவில்லை
கனவில் தொல்லையில்லை
கண்ணில் ஒளி பொங்கும்
உறங்கி எழுந்தால் புது தெம்பு வரும்
மீண்டும் மடிசேர்ந்து
கருவாகும் காலம் வேண்டும்
உன் தாயாகி சீராட்டும்
வரம் வேண்டும் இல்லை
மீண்டும் நாம் பிறவாத
நிலை வேண்டும்.
மகிழ்ந்தேன் உன் மகவாய் நான் ...